சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவயல் அமைந்துள்ளது. இப்பகுதியில், டான்டீ தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மழவன் சேரம்பாடியில் இருந்து சேரம்பாடி மற்றும் கையுன்னி, காரக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையும் அமைந்துள்ளது. இதனை ஒட்டி வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட, டான்டீ தேயிலை தோட்டத்தில் நாள்தோறும் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக யானைகள் இரவு நேரத்தில் தொடர்ந்து தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுவதால், தொழிலாளர்கள் மற்றும் பிற மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. மேலும், தொழிலாளர்கள் குடியிருப்புகளில் இருந்து, 30 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் கழிப்பிடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, முகாமிட்டுள்ள யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.