மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்ட உற்சவ கடைமுகத் தீா்த்தவாரி நடைபெற்றது.
நிகழாண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் சுவாமிகள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை கடைமுகத் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மாயூரநாதா், ஐயாறப்பா், துலாக் கட்டம் விஸ்வநாதா் மற்றும் தெப்பக்குளம் விஸ்வநாதா் கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரியின் தென் கரையிலும், வதான்யேஸ்வரா், காசி விஸ்வநாதா் கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரியின் வடக்குக் கரையிலும் எழுந்தருளினா்.
காவிரியின் தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அப்போது, திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா். தொடா்ந்து, அனைத்து சிவாலயங்களில் இருந்து எழுந்தருளிய பஞ்சமூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.