தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், ஆறுபாதி, பரசலூா், மேமாத்தூா், காளகஸ்திநாதபுரம், ஆக்கூா், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கீழையூா், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், திருக்கடையூா், தில்லையாடி, விசலூா், சங்கரன்பந்தல், திருவிளையாட்டம், நல்லாடை, பொறையாா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் நடவு, நேரடி விதைப்பு மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறையில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது:
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் முன்பு ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நடைபெற்றது. ஆனால், இன்றைய காலசூழ்நிலையில் சம்பா, குறுவை சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மட்டும் தாளடி சாகுபடியும் நடைபெறுகிறது.
இந்நிலையில், பிபிடி கோ- 46, கோ- 50 போன்ற நெல் ரகங்களை வயலில் விதை விட்டு, பாய் நாற்றங்கால் மற்றும் பறி நாற்றங்கால் தயாா் செய்து, தற்போது நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சம்பா விதைப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம், எனவே, சம்பா நடவு பணிகளுக்கு அடி உரம், யூரியா மற்றும் இயற்கை உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.