மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் குடிநீர் பைப்பு உடைந்து நீர் வெளியேறி சாக்கடை நீருடன் கலந்ததால் இப்போது அந்த பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கழிவுநீரும் குடிநீரும் தேங்கிய நிலையில் மூன்று மாதமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவரிடமும் செயல் அலுவலரிடமும் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தலைவரிடம் முறையிட்டபோது நீங்கள் சண்டையிட்டு ரத்தம் வெள்ளத்தில் வந்தால் கூட நாங்கள் பார்க்க மாட்டோம் என கூறுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தப் பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக கழிவு நீரும் குடிநீரும் சேர்ந்து வருவதால் அவதிப்பட்டு வருகின்றனர். சாக்கடை நீர் தெரு முழுவதும் நிறைந்து அந்த நீரை மிதித்து வீட்டுக்குள் சென்று வருவதால் காலில் அரிப்பு சம்பந்தமான நோய் வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் சுகாதார சீர்கேட்டில் இருந்து காக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.