பரவை. நவ21 மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாயில் மர்ம நபர்கள் தென்னை மரங்களின் தூர் மற்றும் மட்டை கழிவுகளையும் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறம் மாறி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளதால் கண்மாயில் கொட்டப்பட்ட தென்னை அகற்றி கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலமுருகன் கூறியதாவது: பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரவை கண்மாயின் மேற்கு கரை பகுதியில் தென்னை மரத்தின் அடித்தூர் பகுதி மற்றும் மட்டை கழிவுகளை மர்ம நபர்கள் டிராக்டர்களில் ஏற்றி வந்து கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதனால் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறம் மாறி தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகின்றது.
மேலும் கண்மாய் கரை அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. எனவே பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சத்தியமூர்த்தி நகர் பகுதி கண்மாயிலிருந்து மரக்கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.