கரூர், குளித்தலை நகர் பகுதி அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவரின் மனைவி அன்பழகி (51). லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை அன்பழகி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஆசிரியை அன்பழகி வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சூட்கேஸில் வைத்திருந்த 5 சவரன் டாலர் செயின், வளையல்கள், சிறிய வகை செயின், தங்க காசு உள்ளிட்ட 7 வகையான 43 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அன்பழகி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அரசு பள்ளி ஆசிரியையின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் ரத்தினவேல் மனைவி சுகந்தி (39) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 43 சவரன் தங்க நகைகளை மீட்டு அவர் கைது செய்யப்பட்டு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.