குளித்தலையில் தெப்பத்தில் உலா வந்த சுவாமிகள்

58பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி ரெத்தினகிரீசுவரர் சாமி தெப்ப உற்சவம் நேற்று (ஏப்ரல் 10) இரவு நடைபெற்றது. 

முன்னதாக அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இருந்து சாமிகள் குளித்தலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சாமிகள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ரெத்தினகிரீஸ்வரர் சாமி மற்றும் கடம்பவனேசுவரர் சாமியின் சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி கொண்டுவரப்பட்டு தெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தொடர்ந்து தெப்பகுளத்தில் சாமிகள் சுற்றிவந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள மண்டபத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண்டபத்தில் இருந்து மீண்டும் சுவாமிகள் கொண்டுவரப்பட்டு தெப்பகுளக்கரையில் வைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் பலர் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி