நாகர்கோவிலில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்.

544பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் மட்டுமின்றி வடசேரி பஸ் நிலையம், அண்ணாபஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகிறது. சில நேரங்களில் நாய்கள் மக்களை விரட்டி கடிக்கும் சம்பவம் நடக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென நாய் செல்வதால் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நிகழ்கிறது.
எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் மாநகர கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தனர். அப்போது இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி அளித்தார். இந்தநிலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம், கேசவதிருப்பாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 14 தெருநாய்கள் பிடிபட்டன. அந்த நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநகரின் மற்ற பகுதிகளிலும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி