ஏரநாடு ரெயிலை இரவு நேரத்திற்கு மாற்ற வேண்டும் குழித்துறை பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

1401பார்த்தது
ஏரநாடு ரெயிலை இரவு நேரத்திற்கு மாற்ற வேண்டும் குழித்துறை பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
குமரி மாவட்டம், நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு ரெயிலை இரவு நேரத்திற்கு மாற்ற வேண்டும் என குழித்துறை ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்க செயலாளர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. -

கடந்த 2009-10 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கொச்சுவேலி - மங்களூருக்கு வாரத்துக்கு மூன்று நாள் செல்லத்தக்க வகையில் புதிய ரெயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த ரெயிலால் திருவனந்தபுரம் பயணிகளுக்கு எத்தகையப் பயனும் இல்லாமல் இருந்தது. இதை திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு வந்து செல்ல வைப்பதற்காகவே, ஜனவரி-2010 முதல் நாகர்கோவில் வரை நீட்டிக்க செய்தனர்.
இந்த ரெயில் நாகர்கோவில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா எர்ணாகுளம், திருச்சூர், சொர்னூர், கோழிக்கோடு, கண்ணனூர் மற்றும் காசர்கோடு வழியாக வழியாக மாலை 6 மணிக்கு மங்களூர் போய் சேருகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரிலிருந்து காலை 7: 20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வழியாக இரவு 11. 20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேர்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கேட்டது மங்களூருக்கு இரவு நேர ரெயில் சேவை, கிடைத்தது கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படாத வகையில் பகல் நேரமும் இல்லாமல் இரவு நேரம் இல்லாத இரண்டும் கெட்டான் ரெயில் சேவை.
ஆகவே குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன் இல்லாமல் இயங்கும் நாகர்கோவில்- மங்களூர் ஏரநாடு ரெயிலை குமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ள இரவு நேர ரெயிலாக மாற்றம் செய்து கொச்சுவெலி – மங்களூர் அந்தோதையா இரயிலின் கால அட்டவணையில் இயக்க வேண்டும்.

அதன்படி இந்த ரெயில் மாலை தோராயமாக 7 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு கொச்சுவெலியிருந்து அந்தோதையா ரயில் புறப்படும் இரவு 9: 25-க்கு அங்கு சென்று விட்டு ஏரநாடு செல்லும் அதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9: 20 மணிக்கு மங்களூர் சந்திப்பு போய் சேரும். மறுமார்க்கமாக இந்த ெரயில் மங்களூர் சந்திப்பிலிருந்து இரவு 8. 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சுமார் 9: 30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு கால அட்டவணை அமையும்.
கொச்சுவெலி மங்களூர் அந்தோதையா ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு கொச்சுவெலியிருந்து மங்களூருக்கு வாரம் 2 நாள் அந்தோதையா ரெயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் முழுவதும் முன்பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் கொண்டு இயங்குவதால் காலியாகவே இயங்குகின்றது. ஆகவே இந்த ரெயிலை பகல்நேர ரெயில் என மாற்றம் செய்து ஏரநாடு இரயிலின் கால அட்டவணையில் திருவனந்தபுரத்திலிருந்து இயக்க வேண்டும்.

அதன்படி இந்த ரெயில் திருவனந்தபுரத்திலிருந்து காலை 3: 30 மணிக்கு புறப்பட்டு மங்களூருக்கு ஏரநாடு செல்லும் நேரம் 6 மணிக்கு போய் சேருமாறு இயக்க வேண்டும். மறுமார்க்கமாக இந்த அந்தோதையா ரயில் மங்களூரிலிருந்து காலை 7: 20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு ஏரநாடு ரயில் வந்து சேரும் நேரம் 8: 45 மணிக்கு வந்து சேருமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இந்த இரண்டு ரயில்களின் கால அட்டவணையை தங்களுக்குள் மாற்றம் செய்து இயக்கும் போது எந்த ஒரு பயணிகளுக்கு எந்த ஒரு பாதகமும் இல்லாமல் ஆனால் குமரி மாவட்ட பயணிகளுக்கு நீண்ட கால கோரிக்கையாக மங்களூருக்கு இரவு நேர ரயில் சேவை கிடைக்கும்.

இது மட்டுமல்லாமல் இவ்வாறு இயக்கும் போது குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக இந்த ரெயில் இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இருமார்க்கமும் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும். இவ்வாறு சென்றால் மட்டுமே குமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :