செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில், 6 வார்டுகளில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக வீராசாமி உள்ளார்.
இந்நிலையில், தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடையே கருத்தொற்றுமை இல்லாமல், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994, பிரிவு 203 ன்படி, ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் லோகேஸ்வரியின் காசோலை பயன்படுத்தும் அதிகாரத்தை ரத்து செய்தார்.
பின், மேல்முறையீடு நடவடிக்கைகாக, ஊராட்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த மூன்று மாதத்திற்கு முன், மீண்டும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் 6 பேர் சேர்ந்து ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தற்போதைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிடம் மனு அளித்தனர்.
மாம்பாக்கம் ஊராட்சி சார்ந்த துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என 200 க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியை பதவி நீக்க கோரி, திருப்போரூர் பி. டி. ஓ. , அலுவலகம் வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.