செங்கல்பட்டு மாவட்டத்தில், போதை பொருள் விற்பனை செய்த, 58 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ். பி. , சாய் பிரணீத் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மது, கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 13ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரையிலான, 10 நாட்களில், மாவட்டம் முழுதும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 58 மீது வழக்கு பதிவு செய்து, 56 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எட்டு பேர் மீது வழக்கு பதியப்பட்டு, நான்கு பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, போதை பொருள்கள் விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும்.