வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வண்டலூர் வட்டாட்சியரை மாற்றக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதாவை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்டலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக ஜோஸ்லின் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ஜோஸ்லின், வட்டாட்சியரை சந்திப்பதற்காக வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, வேங்கடமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற வட்டாட்சியர் புஷ்பலதா அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.