காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசின் மின் ஆளுமை முகமை வாயிலாக, ஏற்கனவே 210 இ- - சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு புதியதாக 340 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டடன.
அதன் அடிப்படையில், மாவட்டம் முழுதும் 550 இ- - சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவை நடத்தும் இ- - சேவை மையங்களும் அடங்கும்.
அரசு துறைகளின் சேவை, சான்று என, அனைத்து சேவைகளுக்கும் இ- - சேவை மையங்கள் வாயிலாகவே, அனைவரும் விண்ணப்பம் செய்து சான்று பெற்று வருகின்றனர்.
பட்டா பெயர் மாற்றம், ஜாதி, வருமானம், இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வது என, அனைத்து சேவைகளுக்கும் இ- - சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.
இதற்கு அரசின் சார்பில், 60 ரூபாய் முதல் சேவைக்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பல இ- - சேவை மையங்களில், அரசு நிர்ணயித்த கட்டணங்களை பெறாமல், பல மடங்கு அதிக கட்டணம் கேட்பது தொடர் கதையாகி வருகிறது.
பட்டா பெயர் மாற்றம் செய்ய 60 ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாயும், குடும்ப அட்டை விண்ணப்பம் செய்ய, 60 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.