உளுந்தூர்பேட்டை திமுகவினர் இடையே கோஷ்டி மோதல்

57பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ மணிகண்ணன் ஆதரவாளர்களையும் ஒன்றிய செயலாளர்கள் ஆதரவாளர்களையும் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்வதில் திமுகவினரிடையே கடும் போட்டி இருந்து வந்தது. 

கடந்த சில நாட்களாக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும் ஒன்றிய செயலாளர்களின் ஆதரவாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், இது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து சுமூகமாக பேசி முடிவு செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ இன்று(நவம்பர் 16) மதியம் உளுந்தூர்பேட்டை பயணியர் விடுதிக்கு வந்திருந்தார். அங்கு சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் மற்றும் இவரது ஆதரவாளர்களும், ஐந்து ஒன்றிய செயலாளர்களின் ஆதரவாளர்களும் குவிந்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள், உதயசூரியன், மணிகண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பயணியர் விடுதியில் உள்ள அறையில் பேசிக்கொண்டிருந்த பொழுது, வெளியே இருந்த திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. 

இதையடுத்து எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் மணிகண்ணன் ஆகிய இருவரும் வெளியே வந்து கைகலப்பில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது இரண்டு தரப்பினரும் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த திமுகவினரை போகச் செய்தனர். தொடர்ந்து அங்கு நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்து வருவதால் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி