திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூச் சந்தை அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், மாகாராஜன், மகேஷ்வரி தம்பதியினா் தரை வாடகைக்கு உணவகம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், பூச்சந்தை வளாகத்தில் கலைஞா் நகரப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 72 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியது.
இந்த நிலையில், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலா்கள் காவல் துறையினா், வருவாய்த் துறையினருடன் சென்று உணவகத்தை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது, கடை உரிமையாளா்கள் கடை முன் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். இதனால், காவல்துறையினருக்கும் உணவக உரிமையாளா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, உணவக உரிமையாளா்களான மகேஷ்வரி, மஹாராஜன் அவரது உறவினா்கள் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், காவல்துறையினா் உதவியுடன், வருவாய்த் துறையினா் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் உணவகத்தை இடித்து தரை மட்டமாக்கினா்.