திண்டுக்கல் மாவட்டத்தில் ”குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்” நிகழ்ச்சிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று முதல் 20. 11. 2024-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, தன்னார்வத் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.