கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லிக்குப்பத்தை அடுத்த சித்தரசூரிலிருந்து வாழப்பட்டு, வைடிப்பாக்கம், வழியாக இஐடி பாரி சர்க்கரை ஆலையின் உட்புறமாக சென்று திருவள்ளுவர் நகர் மற்றும் எய்தனூர் வழியாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மழைநீர் கால்வாய் சென்று கெடிலம் ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் தற்போது கனமழை காரணமாக மேற்படி வாய்க்கால் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகும் அபாயம் உள்ளதால் துணை ஆட்சியர் இளங்கோவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். அப்போது சர்க்கரை ஆலைக்கு செல்லும் முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஐடி பாரி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.
அதன்படி ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஆணையர் கிருஷ்ணராஜன், பொறியாளர் வெங்கடாசலம், இஐடி பாரி நிர்வாக அதிகாரிகள் சிவமணி, சசிகுமார், விசிக நகர செயலாளர் திருமாறன், துணை செயலாளர் அறிவழகன் மற்றும் கவுன்சிலர்கள் முத்தமிழன், பூபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.