ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் ‘மத்திய நிதியமைச்சரின் - நுண்ணறிவு’ என்ற தலைப்பில் வருவாய், வரி விதிப்பு தொடர்பான கருத்தரங்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் அங்கம் வகிக்கும் ரெவின்யூ பார் அசோசியேஷன் சார்பில் லீலா பேலஸில் இன்று நடைபெற்றது. சங்க துணைத்தலைவர் டி. ஆனந்த் வரவேற்றார். சங்கத் தலைவர் எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்புக்குழுத் தலைவர் டி. பானுசேகர் எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்னும் அதிகமாக பேசினால், ஊறுகாய் போடுகிறவர்களைக் கொண்டு போய் நிதியமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் ஆகும் என்றும், அவரை உடனே பதவியை விட்டு இறக்குங்கள் என்றும் பலர் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பது இல்லை. ஊறுகாய் போடுகிறவர் நிதியமைச்சராக பதவி வகிக்கக்கூடாதா? என தெரிவித்தார்.