விலைவாசி உயர்வுக்கு நடவடிக்கை என்ன? - ராமதாஸ்

76பார்த்தது
விலைவாசி உயர்வுக்கு நடவடிக்கை என்ன? - ராமதாஸ்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த் தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ. 15 வரை உயர்ந்துள்ளன. மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகள் கிலோவுக்கு ரூ. 50 வரை உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ. 30 வரை உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தவாறு ரேஷன் விலை கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகை பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.