அன்றாடப் பயன்பாட்டு சாதனங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு, அவற்றை தயாரிக்க 3D-அச்சிடுதல் முறையை பயன்படுத்துவது குறித்தும் சென்னை ஐஐடி கற்றுக் கொடுக்கிறது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர்களும், மாணவர்களும் அடிப்படை மற்றும் மேம்பட்ட அறிவியல், பொறியியல் கருத்துகளை தமிழகத்தின் கிராமப்புறப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மாணவர்கள் 'புதுமையாக' சிந்திக்கும் வகையில் அறிவியல் பூர்வமான கருத்துகளை கற்றுக் கொடுக்கின்றனர். 'டீச் டு லேர்ன்' (www. teachtolearn. co. in) குழுவினர் முன்னெடுத்த 'டிவைஸ் இன்ஜினியரிங் லேப்' (DEL) மூலம் அன்றாடப் பயன்பாட்டு சாதனங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துக்களை பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு, பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்க 3D-அச்சிடுதல் முறையை பயன்படுத்துவது எப்படி என்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.
திறன் மேம்பாட்டிற்கான தளமாக வடிவமைக்கப்பட்ட DEL முன்முயற்சியின்படி, 8, 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்றாண்டு பாடத்திட்டங்கள் உள்ளன. மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய பயன்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய சாதனங்களைப் பற்றி, அவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களின் அடிப்படையில் ஆய்வுக்கூடமும் நடத்தப்படுகிறது.