2024-ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு வழங்கி சிறப்பித்தார். தமிழக முதல்வரால், 2021-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டவாறு தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
இதுகாறும் இவ்விருது சங்கரய்யாவுக்கும், ஆர். நல்லகண்ணுவுக்கும், ஆசிரியர் கி. வீரமணிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், 2024-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’க்கு இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர்.