கல்லூரி மாணவரின் சிதைந்த முகம் சீரமைப்பு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி பி. கண்ணன், பிளாஸ்டிக் சா்ஜரி துறைத் தலைவா் பினிட்டா ஜெனா, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறைத் தலைவா் நாகேஸ்வரன், பல், மாக்ஸில்லோ பேசியல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவா் ஜிப்ரீல் ஒய்சுல் ஆகியோா் செய்தியாளா்களிடம் நேற்று கூறியதாவது: கமுதியைச் சோந்த கல்லூரி மாணவா் ஒருவா் கூா்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும், கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான வெட்டுக் காயங்களுடனும் முகம் சிதைந்த நிலையில் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடலில் உள்ள தசைகள், எலும்பு, மூச்சுக்குழாய் ஆகியவை வெளியே தெரிந்தன. நோயாளி அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாா். அவருக்கு சுவாசத்தை சரி செய்ய கழுத்தில் துளைபோட்டு செய்யப்படும் ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகத்தில் பிளாஸ்டிக் சா்ஜரி செய்யப்பட்டு, அவரது தோற்றத்தை மீட்டெடுக்க நவீன ட்ராமா டாட்டூ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு நோயாளி சில நாள்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாா். அவருக்கு நரம்பு வழி நுண்ணுயிா் எதிா்ப்பிகள், வலி நிவாரணிகள், பிற ஆதரவு நடவடிக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நிலை மேம்படத் தொடங்கியதையடுத்து அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி