இராஜபாளையம் பகுதியில் தொடரும் குழாய் உடைப்பு. தண்ணீரோடு ரோடும் வீண். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தொடர்ந்து உடைபடும் தாமிரபரணி குடிநீர் குழாயுடன் ரோடும் உடைப்பு. இராஜபாளையத்தில் தாமிரபரணி குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கி இதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சப்ளை முடிந்து குடிநீர் விநியோக அழுத்தம் குறித்து பல்வேறு கட்டமாக சோதனை செய்யப்பட்டு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
இருப்பினும் பணிகள் முடிந்த பாடு இல்லை. தாமிரபரணி குடிநீர் திட்ட அமைப்பினர் பணிகளை முடித்து நகராட்சியிடம் ஒப்படைத்து விட்டதாகவும், நகராட்சி குழுக் கூட்டத்தில் ஒப்படைக்கவில்லை என கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலும் கிடைத்தன. இந்நிலையில் பிரதான குழாய்கள் வரும் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கரன்கோவில் முக்கு வரை உள்ள குழாய்கள் அடிக்கடி உடைப்பெடுத்து பல இடங்களில் உடைப்பினால் தண்ணீர் வழிந்தும், ரோடு பாழாகியும் வாகன ஓட்டிகள், மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவது தொடர்கதையாக உள்ளது.
இப்பிரச்சனையால் ரோட்டின் ஒரு பகுதி பள்ளங்களுடன் ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்படுவதுடன், கை, கால் முறிவு உள்ளிட்ட உயிர் பலி சேதம் தொடர்கிறது. நெடுஞ்சாலை துறை வசம் உள்ள ரோட்டில் ஏற்படும் இந்த பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.