மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர புதிய குடியிருப்பு வீடுகள் கட்டித்தரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனி வீட்டிற்கும் ரூ. 5, 31, 750 என 4 ஒருங்கிணைந்த குடியிருப்பு தொகுப்பிற்கு ரூ. 21, 27 000 என மொத்தம் 440 வீடுகள் கட்டுப்பட்டு வருகிறது.
இதற்கு ரூ. 23. 4 கோடி நிதியில், தலா 300 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடுகளாக கட்டப்படுகிறது. ஒவ்வொரு ஒருங்கிணைந்த தொகுப்பு வீட்டிற்கும் இடையே 2. 1 மீ. , இடைவெளியுடனும், 3. 5 மீ. , சாலை வசதியுடன் வீடுகள் கட்டுமாப்பணி நடக்கிறது. இக்குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளில் குடிநீர், கழிப்பறை, மின் இணைப்பு, சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், குடியிருப்பில் படுக்கை அறை சமையலறை, முகப்பு அறை (ஹால்), பின்புறமும் தனித்தனியாக கழிப்பறை மற்றும் குளியலறை வசதியுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. குடியிருப்பு கட்டப்பட்டு வரும் பகுதி கடற்கரை ஒட்டிய பகுதி என்பதால் அதற்கேற்றாற்போல் சிமென்ட் கம்பிகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டும் பணியானது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு வழங்க தயார்படுத்தவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.