மணலி மண்டலம் 21வது வார்டு, அம்பேத்கர் தெருவில், 1991 - 1992ம் ஆண்டு, சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது. கடந்த 2013ல், மண்டல அலுவலக கட்டுமான பணிகள் நடந்தபோது, தற்காலிகமாக மண்டல அலுவலகமும் இங்கு செயல்பட்டுள்ளது. மண்டல அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டவுடன், இந்த கட்டடம் பயன்பாடின்றி போனது. இதன் காரணமாக, அந்த வளாகம் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயன்பாட்டிற்கு லாயக்கற்ற கட்டடத்தில், சமூக விரோதிகள் சிலர் நள்ளிரவு நேரங்களில், தஞ்சம் புகுகின்றனர்.
'குடி'மகன்கள் முகாமிட்டு, மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற சமூக விரோத செயல்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. தவிர, பாலியல் தொடர்பான குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. நேற்று மதியம், இது போல் சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து, தட்டிக் கேட்டுள்ளனர். பின், காவல் துறையினர் அங்கு வருவதற்குள் அவர்கள் தப்பியோடினர்.
அங்கு வந்த காவலர்களிடம், இந்த கைவிடப்பட்ட சமுதாய நல கூடத்தால், தினந்தோறும் பிரச்னை உள்ளது. எனவே, உடனடியாக இடித்து தர வேண்டும் என கூறினர்.