வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

2600பார்த்தது
வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மூன்று மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தஞ்சை தொழிலாளர் துறை உதவியாளர் (அமலாக்கம்) கமலா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது, வரும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்டமாக கர்நாடகாவில் வரும் 26ஆம் தேதியும் அடுத்த மாதம் மே 7ஆம் தேதியும், கேரளாவில் 26ஆம் தேதியும், ஆந்திராவில் நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து, பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தோட்டம் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மேற்கண்ட 3 மாநிலங்களைச் சேர்ந்த தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என அனைத்து நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புகார் அளிக்க ஏதுவாக தொழிலாளர் துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.