குளக்கரையில் சடலமாக கிடந்த பெண், கல்லால் அடித்துக் கொலை

51பார்த்தது
குளக்கரையில் சடலமாக கிடந்த பெண், கல்லால் அடித்துக் கொலை
தஞ்சை அருகே குளத்தின் அருகே பெண் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது அம்பலமானதால் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 52). இவர் வியாழக்கிழமை மனையேறிப்பட்டியில் உள்ள கருமம்குளம் பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண் டிருந்தார். பின்னர் அந்த பகுதியில் வயல்களில் வேலை பார்த்தவர்கள் குளம் அருகே சென்று பார்த்தபோது, அங்கு செண்பகவள்ளி தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று செண்பகவள்ளியின் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக செங்கிப்பட்டி போலீசார் மர்மச்சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் செண்பகவள்ளியின் பின் தலையில் கல்லால் தாக்கப்பட்டதால் தான் அவர்இறந்தது தெரிய வந்தது. இதனால் செண்பகவள்ளி கல்லால் அடித்துக்கொல்லப்பட்டது உறுதியானது. இதனையடுத்து போலீசார், மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.