முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் அ. நாவலரசன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மகேஷ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் தேவதாஸ் (பேராவூரணி) ராஜேஸ்வரி (சேதுபாவாசத்திரம்) அனைத்து மருந்தாளுநர் சங்க வட்ட துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.