கும்பகோணத்தில் போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

1099பார்த்தது
கும்பகோணத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதை பொருட்களை கிழக்கு காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூரூவிலிருந்து கடத்தி வருவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் எஸ். ஐ சுபாஷ், தலைமை காவலர் காமராஜ், போலீசார் நிசாருதீன், ஹரிகிருஷ்ணன், சுகன்யா, ஸ்ரீதர் ஆகியோர் பாலக்கரை பகுதி அசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கார் ஒன்றை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும், அதன் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் என்பதும் தெரிய வந்தது. இதனை கடத்தி வந்த கார் ஓட்டுநர் பட்டீஸ்வரம், மாத்திகேட் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரசாத் (38) என்று தெரிந்தது. தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.