சிவகங்கையில் மதுபோதையில் தேநீர் கடைக்காரருடன் தகராறு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் தொடர்பாக நகர் காவல்நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடையை சேர்ந்தவர் கோபி என்ற கோகுல். இவர் சிவகங்கை நெல்லு மண்டி தெருவில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி ஆட்டோ ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.
மதுப்பழக்கம் உள்ள அதே பகுதியில் தேநீர் கடைநடத்தி வரும் ராமு என்பவரிடம் இலவசமாக பொருட்களை கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவில் வழக்கம் போல மதுபோதையில் மீண்டும் தேநீர்க்கடை உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமு கடையிலிருந்து அரிவாளால் கோகுலை தலை மற்றும் காதில் வெட்டினார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு தேநீர் கடைக்காரரைத் தேடி வருகின்றனர்.