சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கியதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு, அண்ணா சிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர், கோயிலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, ஐயப்பனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி, வெள்ளிக்கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மண்டல விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பூஜைகள் நடத்தினர். பின்னர், குருநாதர்களிடம் மாலை அணிந்து கொண்டனர். மாலை அணிந்து கொள்ள வந்த பக்தர்களால் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அர்ச்சகர் பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து, மண்டல பூஜை காலம் வரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சுவாமிக்கு உகந்த நாள்களான புதன், சனிக்கிழமைகளில் கோயிலில் ஐயப்ப பக்தர்களால் பஜனை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படும். டிசம்பர் 26 ஆம் தேதி கோயிலில் மண்டலபூஜை விழா நடைபெறுகிறது.