சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி புற நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகளாக 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் உள்ள ரோடு குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு முன் மழை நீர் தேங்கி உள்ளது. மருத்துவமனையை சுற்றிலும் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீருடன் மழைநீர் சேர்வதால் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட விளக்குகள் எரிவதில்லை.
இரவில் ரோட்டில் நடமாட நோயாளிகள் செவிலியர்கள் அச்சப்படுகின்றனர். மழைக்காலம் என்பதால் வளாகத்தில் உள்ள புதர்களில் விஷப் பூச்சிகள் தஞ்சம் அடைவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனவே மருத்துவ கல்லூரி நிர்வாகம் வளாகத்தைச் சுற்றிலும் உள்ள ரோட்டை சீரமைத்து, புதர்களை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காவண்ணம் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.