சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எடப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 8.80 கோடி மதிப்பிலான முடிவுற்ற 27 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த 2011-ம் ஆண்டிற்க்கு பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள், புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி, சரபங்கா நதியின் குறுக்கே புதிய பாலங்கள், 15 வழித்தடங்களில் புதிய பஸ் வசதி, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட 4 தொகுதிகள் விவசாயிகள் பயனடையும் வகையில் மேட்டூர் உபரிநீர் மூலம் இப்பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் புதிய பாசன திட்டம் தொடங்கப்பட்டது. அதை திமுக அரசு கிடப்பில் போட்டதால் தற்போது அதிக அளவிலான உபரிநீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் நிலையில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு இப்பகுதிகள் நீர் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் என பேசினார்.