கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி மருத்துவ முகாமை துவங்கி வைத்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் அதீத கனமழை கொட்டியது. ஒரே நாளில் 51 செண்டிமீட்டர் மழை கொட்டியதால் ஊத்தங்கரையில் அன்னா நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளநீர் வடிந்ததால் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் வீடுகளில் குடியேறி வருகின்றனர்.
இயல்பு நிலை திரும்பினாலும் வெள்ளப் பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஊத்தங்கரையில் அதிமுகவின் மருத்துவ அணி சார்பில் மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர். இளையராஜா ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம் முன்னிலையில் நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.