புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை யின்றி படகுகளை இயக்கி வருகிறது. நேற்று முன்தினம் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு 2-வது நாளாக கடலில் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனால் படகுபோக்குவரத்து தொடங்கவில்லை. இதையடுத்து 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர்.