17 வயது சிறுமிக்கு திருமணம் தடுத்து நிறுத்தம்

1072பார்த்தது
17 வயது சிறுமிக்கு திருமணம் தடுத்து நிறுத்தம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமீப நாட்களாக குழந்தை திருமணம் நடைபெறுவது அதிகரித்தபடியே உள்ளது. இருப்பினும், குழந்தை திருமணத்தை நிறுத்த, 'சைல்டு லைன்' அமைப்பிற்கு, பலரும் ரகசிய தகவல்களை தருவதால், பல்வேறு குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட கம்மாளம்பூண்டி கிராமத்தில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் இணைந்து, கம்மாளம்பூண்டி கிராமத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமம் முன்பாக, சிறுமியை நேற்று (29.04.2024) ஆஜர்படுத்தினர். மேலும், குழந்தை திருணம் செய்யக்கூடாது என, பெற்றோரிடம் அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளனர். அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் மண்ணுார் கிராமத்தில், குழந்தை திருமணம் நடைபெற்றதாக, சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.

சமூக நலத்துறை அதிகாரிகள், கிராமத்தில் ஆய்வு நடத்தியதில், சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியானதா அல்லது 18 வயதுக்குட்பட்ட நபரா என, பெண்ணின் ஆவணங்களை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.