வண்டலுார் ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த இருவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீசார், தொடர்ந்து அவர்களின் வாகனத்தை பரிசோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
அப்போது அவர்கள் இருசக்கர வாகனங்களை போட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றனர். எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில், இருவருக்கும் கை கால்களில் காயம் ஏற்பட்டது.
அவர்களை பிடித்த போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின் விசாரித்தனர். அதில், அவர்கள், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், 20, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 21, என்பதும், இருவரும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இருவரும் மண்ணிவாக்கத்தில் தங்கி, கஞ்சா விற்பனை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1. 160 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.