ஜூன் 4 வரை கட்டுப்பாடு நீட்டிப்பு; மாமல்லை வியாபாரிகள் புலம்பல்

1074பார்த்தது
ஜூன் 4 வரை கட்டுப்பாடு நீட்டிப்பு; மாமல்லை வியாபாரிகள் புலம்பல்
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, கடந்த மாதம் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ளன.

அதன்படி, 50, 000 ரூபாய் வரை மட்டுமே ஒருவர் கொண்டு செல்ல வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா, வாக்காளர்களுக்கு அளிக்க பரிசு பொருட்கள், சட்டவிரோத மது கடத்தப்படுகிறதா என, தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், நிலையான கண்காணிப்பு, பறக்கும் படை குழுவினர், முக்கிய சாலைகளில் வாகன சோதனைநடத்துகின்றனர். மாமல்லபுரத்தில், சொகுசு கடற்கரை விடுதிகள், உணவக ரெஸ்டா ரெண்டுகள், கைவினை பொருள் விற்பனைகடைகள், சிற்பக்கூடங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.

தேர்தல் கட்டுப்பாடால், இத்தகைய தொழில் தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, திருக்கழுக்குன்றம், செய்யூர் தாலுகா பகுதிகளிலிருந்து, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, தர்பூசணி கொண்டு செல்லும், மொத்த வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

இச்சூழலில், தேர்தலுக்குப் பிறகும், ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என, தேர்தல் ஆணையம்அறிவித்துள்ள நிலையில், இப்பகுதி தொழில் தரப்பினர் அதிருப்தியில்உள்ளனர்.

தொடர்புடைய செய்தி