உங்கள் உடலில் துர்நாற்றம் நீங்கி மணம் கமழட்டும்.. இதோ டிப்ஸ்!

10179பார்த்தது
உங்கள் உடலில் துர்நாற்றம் நீங்கி மணம் கமழட்டும்.. இதோ டிப்ஸ்!
வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் ரசாயன மூலப்பொருள்களான `பாராபென்ஸ்’ (Parabens), `டிரைகுளோசன்’ (Triclosan) போன்றவை மனித உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வாசனைத் திரவியங்களை நேரடியாக உடலில் பயன்படுத்துவதால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படுவதோடு சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும், அந்த ரசாயனங்கள் சருமத்தில் உள்ள துளைகள் வழியாக உடலுக்குள் சென்று அரிப்பு போன்ற ஒவ்வாமைப் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உடலில் நேரடியாகப் பயன்படுத்தும் `பாடிஸ்ப்ரே’வை அதிகம் பயன்படுத்துவதால் அந்த இடங்களில் சீழ் பிடிக்கும் அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம். அதனால் நேரடியாக உடலில் அடிப்பதைக் காட்டிலும் உடையில் பூசிக்கொள்வது சற்று பாதுகாப்பானது.

குளிப்பதற்கு முன்பு, சந்தனத்தை நன்றாகத் தண்ணீரில் கரைத்து உடலில் வியர்வை அதிகமாக சுரக்கும் இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளித்தால் வியர்வை நாற்றம் வராது. மேலும் ஒருநாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பித்தம் அதிகமாக இருப்பதால்தான் வியர்வை சுரக்கிறது.

எனவே, பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருள்களை அளவாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி, சி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நன்னாரி, வெட்டிவேர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குடிக்கும் நீரில் போட்டுவைத்து அந்த நீரை அருந்தலாம்.

மக்னீசியம் நிறைந்த உணவுகளான கீரைகள், நட்ஸ், விதைகள், முழுமையான தானியங்கள், சிறுதானியங்கள், மீன், பப்பாளி, தர்பூசணி, வெள்ளரி, பீட்ரூட், எலுமிச்சை, தக்காளி, வெந்தயம் ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கடுக்காய்ப் பொடி மற்றும் பற்படாகத்தை அக்குள் பகுதியில் பூசி, அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம்.

குளியலுக்கு சோப்பு பயன்படுத்துவதைவிட நலுங்குமாவு பயன்படுத்துவது, தலைமுடிக்கு சீயக்காய் பயன்படுத்துவது நல்லது. இவை இயற்கையான வாசனைத் திரவியங்களாகச் செயல்படும். வியர்வை என்பது மனித உடலில் இயற்கையாக நிகழும் கழிவு வெளியேற்றமே. அதை நிர்வகிக்கவும் இயற்கையான வழிமுறைகளைக் கையாள்வதே நல்லது.