பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் ஊட்டச்சத்து வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நடைபெற்றது.
இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மகளிர்க்கு வழங்கப்பட உள்ளது. இதில் ஆத்தூர் ஒன்றிய அளவில் 278 பேருக்கும் அதில் முதல் கட்டமாக 30 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஊராட்சி நிர்வாகம் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையை சுற்றிலும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடப்படவில்லை. இதனால் ஈக்கள் அதிக அளவில் பயனாளிகள் மீது அமர்ந்தது முகம் சுளிக்க வைத்தது.
மேலும் நிகழ்ச்சிக்காக காலை 8: 30 மணி அளவில் இருந்து பயனாளிகளான பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்களை நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அமர வைத்திருந்தனர். 3 மணி நேரம் பச்சிளம் குழந்தைகள் நிகழ்ச்சிக்காக காத்துக் கிடந்த அவல நிலையில் குழந்தைகள் அழுது கொண்டும் இருந்தனர்.
ஊட்டச்சத்து கண்காட்சிக்காக வைக்கப்பட்ட நவதானியங்கள் பல வகைகள் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றிலும் ஈக்கள் அமர்ந்து இருந்தன.
முதல்வர் காணொளி காட்சி மற்றும் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டதால் நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.