பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் 87 வீரர்களும், 7 பயிற்சியாளர்களும் பங்கேற்றனர். கோவை அருகே தொப்பம்பட்டியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் வீரர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் ஒரு பகுதியாக, ஆழியாறு அணை பகுதியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகையில், தண்ணீரில் தத்தளிக்கும் இருவரை மீட்கும் விதமாக, மத்திய ரிசர்வ் படையினர் கயிற்றை லாவகமாக வீசி அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மழைவெள்ள காலங்களில் கைகளுக்கு கிடைக்கும் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தி வெள்ளத்தில் மூழ்காமல் நீந்தும் முறை, ஆழமான தண்ணீரை கண்டறியும் முறை ஆகியவையும் கற்றுத் தரப்பட்டன. மேலும், ரப்பர் படகு மூலம் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் முறையும் விளக்கப்பட்டது.