மாநில அளவிலான விருதுக்கு, இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த்தன் இன்று (அக்.,5) வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை விவசாயிகளுக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில், இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர், மாநில அளவிலான நிபுணர் குழு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2ம் பரிசாக ரூ. 60 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்பும் இயற்கை விவசாயிகள், விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளமான, www. tnhorticulture. tn. gov. in ல் இருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.