ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு வரும் அக். 6-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டும் போலீஸார், திமுக பவள விழா நிகழ்வுகளுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி? என கேள்வி எழுப்பினார். பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 42 இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் முடிவு எடுத்து போலீஸார் நாளை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.