ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியதன் விளைவாக, தனியார் நிறுவனங்களின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருவதையும், அதே சமயத்தில் ஆவின் பொருட்களின் விநியோகம் குறைந்து கொண்டே செல்வதையும் பார்க்கும்போது ‘ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம்’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
ஏழையெளிய மக்களுக்காக, எம். ஜி. ஆர் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட ஆவின் நிறுவனம் அழிந்து கொண்டே செல்வது மிகுந்த பேரதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பால் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஓராண்டாகவே ஆவின் வெண்ணெய் பல பகுதிகளில் கிடைப்பதேயில்லை.
முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக கிடைக்கவும், ஆவின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கவும் ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.