
சென்னை: ஐடி ஊழியர் பெயரில் வங்கியில் ரூ.65 லட்சம் மோசடி
சென்னை கொளத்தூர் சம்தரியா காலனியை சேர்ந்தவர் ஜமுனா (28). இவரது கணவர் பாலாஜி. கணவன் - மனைவி இருவரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு ஜமுனாவுக்கு, வண்டலூரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் அறிமுகமானார். அவர், ஜமுனாவையும், அவரது கணவரையும் தொடர்பு கொண்டு, தனது நண்பரின் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். ஜமுனா தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஹரிஷ் தனது நண்பர் மூலம், வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகவும், மாத தவணைகளை நிறுவனத்தின் மூலம் செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, ஜமுனா பெயரில் வங்கியில் ரூ. 65 லட்சத்து 56,044 கடன் பெற்று, அந்த பணத்தை நிறுவனத்தில் ஹரிஷ் முதலீடு செய்துள்ளார். ஆனால், ஹரிஷ் கூறியதுபோல, மாத தவணைகளை சரியாக செலுத்தாமல் தனது நண்பர் மற்றும் அந்நிறுவனத்தின் ஊழியர்களுடன் சேர்ந்து ஜமுனாவை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஜமுனா கேட்டபோது, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து ஜமுனா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், மோசடியில் ஈடுபட்ட ஹரிஷ் (29), அவரது நண்பர் சூளைமேடு சதீஷ் (32), செங்குன்றம் ரேகா (32), வேளச்சேரி லோகேஷ் (29) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.