ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிவிட்டதா? கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை குறித்து உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.