ஐபில் இறுதிபோட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. டூப்ளசிஸ் அதிகபட்சமாக 86 ரன்கள் விளாசியிருந்தார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் – வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ரன்களை குவித்தனர். தொடக்கத்திலேயே வெங்கடேஷின் எளிய கேட்சை தோனி கோட்டை விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட அவர் அரைசதம் விளாசி அசத்தினார்.
இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாது சென்னை அணி திணறி வந்தது. இந்த நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் பிடிக்கப்பட்ட கேட்சும் மேலே கேமரா ஒயரில் தொட்டு வந்ததால் இல்லாமல் போனது. 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி கொல்கத்தா அணி 88 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ரன் சேர்த்த தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 31 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்து இருந்து நிலையில் தாக்கூர் வீசிய 10.4 ஓவரில் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட் வரை கொல்கத்தா அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இருந்தது. ஆனால் முதல் விக்கெட்டுக்கு பிறகே ஆட்டத்தின் போக்கும் சென்னை பக்கம் திரும்பியது. தொடர்ந்து வந்த நிதிஷ் ராணா, ரன்கள் எதும் அடிக்காமல், தாக்கூர் வீசிய 10.6 ஓவரில் டு பிளஸிஸ் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இருப்பினும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த தொடக்க வீரர் சுப்மான் கில் 6 பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்த நிலையில், எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தொடங்கினாலும் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் கொல்கத்தா அணி தடுமாறியது. 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு ரன்களை சேர்த்து தோல்வியை தழுவியது. 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே கொல்கத்தாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் ஆனது.