வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாணம்: விமர்சையாக நிறைவு

53பார்த்தது
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் இக்கோவில் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் பிரார்த்தனை தளமாக இக்கோவில் விளங்குகிறது. இச்சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாள் திருவிழாவான வெள்ளி கருட சேவையை தொடர்ந்து, ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தசாவதார மண்டபத்தில் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டினர்.
இதனையடுத்து வரதராஜ பெருமாள் தனது துணைவியாக ஸ்ரீதேவி பூதேவிக்கு மாங்கல்யம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளின் திருமண நிகழ்வைக் கண்டு தரிசனம் செய்தனர். பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 25ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கும்பகோணம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி