வெள்ளகோவில்: வார்டில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம்

74பார்த்தது
வெள்ளகோவில் நகராட்சி 2வது வார்டு பகுதி உப்பு பாளையம் ரோடு, ஐயப்பன் கோவில், கல்லாங்காடு வலசு, பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், வீரக்குமார் கோவில் ஆகிய பகுதிகளை கொண்டது. முத்தூர் சாலை, வள்ளியரச்சல் சாலை பகுதிகளில் மழை பெய்தால் அந்த நீரானது சாக்கடை நீர் கலந்து ஐயப்பன் கோவில் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த நீரில் இருந்து முளைக்கும் தாவரங்கள் புதர் மண்டி கிடைக்கின்றது. அந்த தாவரத்திலிருந்து பஞ்சுகள் பறந்து குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகளையும் உண்டாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தனியார் நிலத்தில் தண்ணீர் தேங்குகின்றதை அப்புறப்படுத்த வேண்டும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் மனு கொடுத்தும் நகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி புதர் மண்டி செடிகள் வளர்ந்திருக்கும் இடங்களை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தையும் , நகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.