தூத்துக்குடியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மடத்தூர் முழுநேர ரேஷன் கடையில் இருந்து, திரவியரத்தினநகர், பால்சன் நகர், முருகேசன் நகர் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு திரவியரத்தினநகரில் தனியாக பகுதிநேர ரேஷன்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் 220 ரேஷன் கார்டுதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி துணைப்பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) அ. சுப்புராஜ், தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் மு. கலையரசி, மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, தாசில்தார் ஞானராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் அ. சாம் டேனியல் ராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் வி. அந்தோணிபட்டுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.